EAR BUDS
கோழி இறகை எடுத்து காதில் விட்டு குடைந்தால், ஆஹா என்ன ஒரு சுகம்… இன்றும் கோழி இறகால் காது குடையும் பழக்கம் கிராமங்களில் இருந்து வருகிறது. ஆனால் கடந்த சில பல ஆண்டுகளாகவே கோழி இறகைத் தூக்கி எறிந்துவிட்டு ‘இயர் பட்ஸ்’ (ear buds) எனும் புதிய ஒன்றை வைத்து காது குடைந்து வருகின்றோம்.
இதன் மூலம் காதின் சுகாதாரம் பாதுகாக்கப்படுவதாய் நம்பும் நமக்கு அதிர்ச்சி தெரிகிறது இந்தத் தகவல். இந்தியாவில், மக்களை தாக்கும் நோய்கள் என்று பட்டியலிடும் நேரத்தில் மக்களே தேடிப்போய் ஏற்கும் நோய்களின் பட்டியலை நாம் எண்ணிப்பார்க்க மறந்துவிடுகிறோம்.
அப்படி கடந்த பத்து ஆண்டுகளில் ‘இது தவறு’ என்று தெரியாமலேயே நாம் தேடிப்போய் ஏற்கும் நோய்கள் என்ற வரிசையிலுள்ளது ஒடிடிஸ் எக்ஸ்டெர்னா (otitis externa).
அப்படி என்ன இது ஒடிடிஸ்- எக்ஸ்டெர்னா? நம் உடலில் காது என்ற உறுப்பு ஒலியைக் கேட்க, ஒலியை யூகிக்க மட்டுமே பயன்படுகின்றது என்று நினைத்திருக்கின்றோம். உண்மையில் காது, கேட்க மட்டுமல்ல நமது உடலை சமநிலைபடுத்தும் (balance) ஒரு முக்கிய செயலையும் செய்கிறது.
எடுத்துக்கட்டாக நாம் ராட்டினத்தில் சுற்றும் பொழுது தலை சுற்றினாலும் நாம் கீழே விழாமல் நம் உடலை சமநிலை தாங்கி நிற்கும் தன்மை போன்ற செயல்களில் காதின் பங்கும் உள்ளது. இப்படிபட்ட காது மிகவும் மென்மையான, அதே நேரம் சிக்கலான ஒரு உறுப்பும் கூட.
இந்தக் காது குடையும் பழக்கமானது நாளடைவில் அதிகரித்து அதிக அளவு செவி மெழுகு வெளியேற்றப்பட்டால் ஒடிடிஎஸ் எனும் இந்தத் தொற்றுநோய்க்கு வழிவகுக்கும். அதேபோல் இந்த நோயை ‘ஸ்விம்மர்ஸ் இயர்’ (swimmers ear) என்றும் குறிப்பிடுகின்றனர்.
காரணம், நீச்சலில் ஈடுபடுவோரின் காதில் நீர்புகுந்து நீரின் வழியே இந்த செவி மெழுகு வெளியேறி இந்தத் தொற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும். காதில் வலி, வீக்கம், சிராய்ப்பு போன்ற அறிகுறிகளுடன் தொடங்கி பின்னர் காது முற்றிலும் கேட்கும் திறனை இழக்கும் வாய்ப்பு உண்டாம். அழுக்கு நீரில் நீச்சலடித்தாலும் இந்த நோய் வரும் வாய்ப்பு இருக்கிறதாம்.
காதிலுள்ள அழுக்கை எடுக்கப் பயன்படும் பொருளாகப் பார்க்கப்பட்டு வருகின்ற இந்த காது குடையும் பட்ஸ் மூலம் செவி மெழுகு வெளியேற்றப்படுவதால் ஆபத்து தேடி வாங்கப்படுகிறது என்பதே உண்மை. நம் வழக்கத்திலிருந்து மாறி, மேற்குலகத்தால் ‘சுத்தம்’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட பல வழக்கங்கள் நமக்கு தீதுதான் என்று ஒவ்வொன்றாக அறியப்படுகிறது.