ஒரு புதிய ஆய்வு ஒன்று, முடக்குவாதத்தில் அழற்சியை சரி செய்ய பயன்படுத்தும் மருந்து முதுமையை தள்ளிப்போடுவதில் உதவுவதாக, எலியின் மேல் நடத்தப்பட்ட சோதனையில் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆய்வு Nature Cell Biology என்ற அறிவியல் கட்டுரை பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆய்வின் மூலம் கட்டுரையின் முடிவில் இணைக்கப்பட்டுள்ளது.
வயதாகும் இரத்த செல்கள்:
இதற்கு முந்தைய ஆய்வுகள் வயதான எலியின் உடலில் இளமையாக உள்ள எலியின் இரத்தத்தை செலுத்தும்போது இதயம் வலிமையாகவும் உடலில் உள்ள தசைகள் வலுவானதாகவும் மற்றும் எலியின் திறன் மேலும் அதிகரிப்பது கண்டறியப்பட்டது.
இந்த ஆய்வின் மூத்த ஆய்வாளரும் கொலும்பியா ஸ்டெம் செல் இயக்கத்தின் இயக்குனருமான Dr. இமானுவேல் பாசக் கூறுகையில் “ஒரு உடலுக்கு வயதான இரத்த மண்டலம் அதிகளவில் எதிர்மறையான பாதிப்பை (இரத்தத்தில் உள்ள பலவிதமான புரதங்கள், சைடோகைனின் மற்றும் செல்களின் மூலம்) ஏற்படுத்துகின்றன” மற்றும் “ஒரு 70 வயதுள்ள உடல் 40 வயதுடைய இரத்த மண்டலத்தை பெற்றிருக்கும்போது அவர்களுக்கு நெடிய வயதும் அல்லது நெடு நாட்களுக்கு நல்ல உடல் நலனும் கிடைக்கிறது” என கூறுகிறார்.
ஆய்வாளர்கள் தற்போது இளமையான இரத்தத்தின் மூலம் எந்தவிதமான நன்மைகள் கிடைக்கப்பெறுகின்றன என்பதை அறிந்து அதற்கான சிகிச்சை முறையை வயதானவர்களுக்கு அளிக்கும்போது அவர்களின் வாழ்நாளை சில காலம் நீட்டிக்க இயலும் என முயற்சித்து வருகின்றனர்.
புதிய இரத்தமும் ஆய்வும்:
உடலில் உள்ள அனைத்து இரத்த செல்களும் ஹெமாட்டோபாய்டிக் ஸ்டெம் செல்கள் மூலம் தான் உருவாகிறது, ஆனால் வயதாகும் போது இந்த ஸ்டெம் செல்கள் பாதிப்படைவதால் இவை மிகக்குறைந்த அளவிலான சிவப்பு மற்றும் வெள்ளை இரத்த செல்களை உருவாக்குகின்றன.
இதன் காரணமாக இரத்தசோகை மற்றும் நோய் தொற்றுகளின் மூலம் ஏற்படும் பாதிப்பு அதிகரிக்கும். மேலும் இதனால் தனது DNA வில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய முடியாமல் போவதால் இரத்தப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்பை அதிகரிக்கிறது.
இந்த ஆய்வில் தற்போது வயதாகும்போது ஹெமாட்டோபாய்டிக் ஸ்டெம் செல்களின் பாதிப்புக்கு காரணமான ஆதாரங்களை கண்டறிந்துள்ளனர்.
மேற்கண்ட பாதிப்புகளை சரி செய்ய முடக்குவாதத்திற்கு பயன்படுத்தும் மருந்தான அனகின்ராவை எலிக்கு அளித்து சோதித்ததில் ஹெமாட்டோபாய்டிக் ஸ்டெம் செல்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குணமாகி மீண்டும் நல்ல நிலையில் உள்ள இரத்த செல்களை உருவாக்கும் நிலைக்கு திரும்பியதை பதிவு செய்துள்ளனர்.
முடிவு:
எலியில் இந்த ஆய்வானது வெற்றியடைந்ததை அடுத்து மனிதனுக்கு ஏற்படும் ஹெமாட்டோபாய்டிக் ஸ்டெம் செல்களின் பாதிப்பை இதே முறையை கொண்டு சரி செய்யும் முனைப்பில் உள்ளனர்.
எலும்புகளில் உள்ள திசுக்கள் 50 வயதை நெருக்கும்போது சிதைய ஆரம்பிக்கிறது, அப்போதே நாம் ஹெமாட்டோபாய்டிக் ஸ்டெம் செல்களின் ஆரோக்கியத்தை சிகிச்சையின் மூலம் சரிசெய்யும் போது மீண்டும் இவை இளமையான இரத்தத்தை உருவாக்கி ஒருவரின் ஆரோகியத்தையும் வாழ்நாளையும் அதிகரிக்க செய்யும் என்று இந்த ஆய்வின் ஆய்வாளரான Dr. இமானுவேல் பாசக் கூறியுள்ளார்.