சுருக்கம்:
புதியதாகக் கண்டறிந்த இந்தப் பொருள் வெளியில் வெப்பம் அதிகமாக இருக்கும்போது வீட்டின் உள்ளே குளிராகவும், வெளியே அதிகக் குளிராக இருக்கும்போது வீட்டின் உள்ளே மிதமான வெப்பநிலையில் வைத்துகொள்ளும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்தத் தொழில்நுட்பத்தை வேறு எங்குக் கேள்விப்பட்டுள்ளீர்கள் ?
தெரிந்துகொள்ளுங்கள்!
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட சிவாலயம் உள்ளது. இங்கு உள்ள பெருவுடையாரின் கருவறை சந்திர காந்தக் கல்லால் பதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெயில் காலத்தில் கோவிலின் உட்புறம் குளுமையாகவும் குளிர் காலத்தில் கோவிலின் உட்புறம் வெதுவெதுப்பாகவும் இருக்கும்.
தொழில்நுட்பம்:
சுவரின் வெளியே பதிக்கப்படும் இந்தப் பொருள் தானாகவே தனது புறஊதா கதிர்களை மாற்றி அமைத்துக்கொள்ளும் திறனுடையது.
வெளியே வெப்பம் அதிகமாக இருக்கும்போது இதன் மீது படும் வெப்பத்தில் 92% உமிழ்ந்துவிடுகிறது. இதனால் வீட்டின் உட்புறம் குளுமையாக இருக்கும்.
குளிர் காலங்களில் இதன்மீது படும் வெப்பத்தில் வெறும் 7% மட்டுமே உமிழ்கிறது இதனால் வீட்டின் உட்புறம் கதகதப்பாகக் காணப்படும்.
எதற்காக இந்த தொழில்நுட்பம் ?
உலகில் உள்ள மொத்தக் கண்ணாடி வீட்டு விளைவில் 10% வீடுகள் மற்றும் பெரும் கட்டிடங்களின் மூலம் தான் ஏற்படுகிறது. மேலும் வீடுகள் மற்றும் பெரும் கட்டிடங்களைக் காலநிலைக்கு ஏற்ப வெப்பமாகவும் குளிராகவும் வைக்க மொத்த மின்சாரத்தில் 30% நாம் இதற்காகவே செலவிடுகிறோம். இதனால் புவியின் வெப்பநிலை அதிகரித்த வண்ணமேயுள்ளது.
மின்சாரம் மற்றும் கார்பன் அளவை குறைத்து புவியின் வெப்பநிலையை குறைக்கும் வகையில் இந்தத் தொழில்நுட்பம் அமைகிறது.
செயல்படும் விதம்:
இத்தொழில்நுட்பத்தில் மொத்தம் 5 அடுக்குகள் உள்ளன அவை,
- பாலி எத்திலின் இழையால் ஆன அடுக்கு – PE Film
- தங்க வலை ஒத்த அடுக்கு – Gold Grid
- கிராபின் அடுக்கு – Pt-graphene
- மின் பகுப்பொருளால் ஆன அடுக்கு – Aqueous Electrolyte
- தாமிர அடுக்கு – Copper Layer
குளிர் காலத்தில் செயல்படும் விதம்:
குளிர் நிலையில்; நேர் மின் முனை பாலி எத்திலின் இழையுடனும் எதிர் மின் முனை தாமிரப் படலத்துடனும் இணைக்கப்பட்டிருக்கும் நிலையில், சுவரின் வெளிப்புறம் பதிக்கப்பட்டுள்ள இந்த பொருளின் மேல் வெயில் படும் வெப்பமானது அப்படியே கட்டிடத்தின் உட்புறம் கடத்தப்படுகிறது இதனால் கட்டிடத்தின் உட்புறம் சற்று வெப்பமாக இருக்கும்.
வெயில் காலத்தில் செயல்படும் விதம்:
வெப்ப நிலையில்; நேர் மின் முனை தாமிர படலத்துடனும் எதிர் மின் முனை பாலி எத்திலின் இழையுடனும் இணைக்கப்பட்டிருக்கும் அப்போது தாமிர படலத்தில் உள்ள தாமிர அணுக்கள் எதிர் மின் அணுக்கள் மூலம் கவரப்பட்டு கிராபின் அடுக்கில் தங்கிவிடும்.
இதனால் புதியதாக ஒரு அடுக்கு உருவாகிறது, இதன் காரணமாக சுவரின் வெளிப்புறம் பதிக்கப்பட்டுள்ள பொருளின் மேல் படும் வெயிலால் ஏற்படும் வெப்பமானது கடைசியாக உள்ள அடுக்கை அடையும் முன்னரே தடுக்கப்படுகிறது. இதனால் கட்டிடத்தின் உட்புறம் குளுமையாக இருக்கும்.
எளிமையாக புரிந்துகொள்ள: ஒரு மின்கலனை நினைவில் கொள்ளுங்கள். மின்கலனில் மின்சாரம் நேர்மின் (+) முனையில் இருந்து எதிர்மின் (-) முனைக்கு எலக்ட்ரான்கள் கடத்தப்படும் போது ஒரு மின் சுற்று உருவாகிறது.
அதைப்போலவே முதல் அடுக்கில் இருந்து கடைசி அடுக்கிற்கு மின்சாரத்தை செலுத்தும்போது தாமிர அணுக்கள் கிராபின் அடிக்கில் வந்து படிந்து ஒரு புதிய அடுக்கை உருவாக்கி வரும் வெப்பத்தை தடுத்துவிடுகிறது.
பாதகம் மற்றும் சாதகங்கள்:
- மின்சார செலவை குறைக்க இயலும். இந்த தொழில்நுட்பத்திற்கு மிகவும் சிறிய அளவில் மட்டுமே மின்சாரம் தேவைப்படும்.
- கட்டிடங்களை குளுமையாக்க பயன்படுத்தப்படும் பொருட்களால் ஏற்படும் புவி வெப்பமயமாதல் பாதிப்பினை குறைக்கலாம்.
- இதன் ஆரம்ப செலவு அதிகமாக இருக்கக்கூடும் .
முடிவு:
இந்தத் தொழில்நுட்பத்தின் ஆராய்ச்சி முடிந்து தற்போது எந்த விதத்தில் இந்தப் பொருளை உற்பத்தி செய்யலாம் என்று ஆராய்ந்து கொண்டு உள்ளனர். விரைவில் ஓர் ஓடு போன்ற அமைப்பாகவோ அல்லது சுவருக்குப் பூசும் பூச்சு போன்ற ஒன்றாகவோ இதனை நாம் பயன்படுத்தலாம்.
Radiative electrochromism for energy-efficient buildings. Nat Sustain (2023). https://doi.org/10.1038/s41893-022-01030-3