மீன்களில் கலக்கப்படும் பார்மலின்
|ஏன் கலக்கப்படுகிறது? என்னென்ன தீமைகள்?
பார்மலின் என்றால் என்ன?
- பார்மலின் என்பது பார்மால்டிஹைடு எனும் வேதிப் பொருளின் கரைசல் ஆகும். தண்ணீருடன் அளவில் 40% அளவுக்கோ அல்லது எடையில் 37% அளவுக்கோ பார்மால்டிஹைடு கலக்கப்படும்போது பார்மலின் உருவாகிறது. பார்மலின் ஒரு நிறமற்ற வேதிப் பொருள்.
- இது மருத்துவத்துறையில் கிருமிநாசினியாகவும் பதப்படுத்தியாகவும் பயன்படுத்தப்படுகிறது. பார்மலின் கலந்த நீரில் நாம் மாமிசம் அல்லது தாவரம் எதைப்போட்டு வைத்தாலும் அது கெடாமல் அப்படியே இருக்கும். பொதுவாக தாவரங்கள் அல்லது உடல் பாகங்களைப் பதப்படுத்தவே இது பயன்படுகிறது.
மீன்களில் ஏன் கலக்கப்படுகிறது பார்மலின்?
கடலில் பிடிக்கப்படும் மீன்கள், நண்டுகள், இறால்கள் ஆகியவற்றை அன்றைக்கே சாப்பிடுவது சிறந்தது. ஆழ்கடலில் மீன் பிடிப்பவர்களில் சிலர் தங்கள் மீன்கள் வெகு நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்க ஃபார்மலின் என்ற ரசாயனத்தைப் பயன்படுத்துகின்றனர், இதனால் 15 நாட்கள் அல்லது அதற்கும் மேல் கூட மீன்கள் கெடாமல் இருக்கின்றன. இது தவறானது.
மீன்களில் பார்மலினைப் பயன்படுத்தினால்?
பார்மலின் நச்சுத்தன்மை கொண்டது. இதை உணவுப் பொருட்களில் கட்டாயம் பயன்படுத்தக் கூடாது. இதனை மனிதர்கள் உட்கொண்டால் கண்கள், தோல், தொண்டை, வயிறு ஆகிய பகுதிகளில் எரிச்சல் ஏற்படும். கிட்னி, கல்ல்லீரல் ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்படும். இரத்தப் புற்றுநோய் தோன்றவும் காரணமாக அமையும்.
எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள்?
பார்மலின் கலந்த மீனை பார்த்தவுடன் கண்டுபிடிக்க முடியாது. மீனை வெட்டி, அதன் சதையை ஆய்வகத்தில் ஆய்வுக்கு உட்படுத்தினால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.
மேலும் சில தகவல்கள்:
- ஃபார்மால்டிஹைட் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் மற்றும் சேதமடைந்த மனித உயிரணுக்களைக் கொல்லக்கூடிய ஒரு நச்சுப் பொருளாகும். உணவு உற்பத்தியாளர்கள் சில நேரங்களில் மீன், இறைச்சிகள், பால், நூடுல்ஸ் இறைச்சிகள் போன்ற உணவுகளுக்கு ஃபார்மால்டிஹைடுகளை சேர்க்கின்றனர். பல உணவுகள் இயற்கையாகவே சிறிய அளவில் ஃபார்மால்டிஹைடை கொண்டுள்ளன இருப்பினும், தற்போது செயற்கையாகவே அதிகப்படியான ஃபார்மால்டிஹைட் பல உணவுகளில் கலப்பது தெரியவந்துள்ளது.
- பல நாடுகளில் ஃபார்மால்டிஹைடை உணவுகளில் சிறிதளவு சேர்த்து விற்பனை செய்கின்றனர் காரணம் அவை கெட்டுவிடாமலும் அதிக தொலைவிற்கு குளிர்சாதனப்பெட்டியில் வைக்காமல் எடுத்துச்செல்ல முடியும் என்பதாலும் தான்.
- ஃபார்மால்டிஹைட் அளவு அதிமானால் நாளடைவில் அது புற்றுநோய் உருவாகும் சாத்தியகூறுகளை கொண்டுள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் மூச்சி தினறல் கடுமையாக ஏற்படும் அபாயம் உள்ளது, கருவுற்ற தாய்மார்கள் இது கலந்த உணவினை உண்ணும்போது அது குழந்தை வளர தேவையான சத்துகளை குறைத்து பெரும் பிரச்சனைக்கு வழிவகுக்கிறது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.